யானைகளின் தந்தங்களை கடத்தி விற்க முயன்ற தர்மபுரியை சேர்ந்த மேலும் 3 பேர் கைது

யானைகளின் தந்தங்களை கடத்தி விற்க முயன்ற தர்மபுரியை சேர்ந்த மேலும் 3 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-29 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி, உரிகம், தளி, ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளை சுட்டுக்கொன்று தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த நவீன்பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 தந்தங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அஞ்செட்டியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அவரது கார் டிரைவர் முத்துசாமி ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர துணை கமிஷனர் ராம்தேவ் சேபாட், போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகிட் ஆகியோர் அஞ்செட்டி வந்தனர். அவர்கள் தமிழக போலீசார் உதவியுடன் காதர்பாஷா, முத்துசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது யானை தந்தங்கள் கடத்தி விற்பனை செய்ததில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜாவித், சபரிநாதன், சதீஸ் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை பெங்களூரு, தமிழகத்தை சேர்ந்த போலீசார் உதவியுடன் ஜாவித், சபரிநாதன், சதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 4 யானை தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட காதர்பாஷாவின் கார் டிரைவர் முத்துசாமிக்கு யானை தந்தங்கள் கடத்தலில் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார் அவரை விடுவித்தனர். மீதமுள்ள 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு போதை பொருள் கடத்தலிலும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தம் 16 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்