குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதனால் இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் குடிநீர் வினியோகம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் வெகு தொலைவில் உள்ள விளை நிலங்களுக்கும், அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. அதனால் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள், குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.