வழக்கை வாபஸ் பெறவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஊர் நாட்டாமை தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே வழக்கை வாபஸ் பெறவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஊர் நாட்டாமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-29 22:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 64). இவர் அந்த பகுதிக்கு நாட்டாமையாக இருந்து வந்தார். சந்திரசேகர் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் கட்டி வருகிறார். அந்த கோவில் கட்டுவது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வீரப்பன் என்பவருக்கும் சந்திரசேகருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் சந்திரசேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சந்திரசேகர் மகன் பார்த்திபன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எங்கள் பகுதியை சேர்ந்த வீரப்பனுக்கும் எனது தந்தைக்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 24–ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து எனது தந்தை உள்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்காக 29–ந் தேதி (அதாவது நேற்று) மீண்டும் வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெரும்பாக்கம் காலனியில் உள்ள ஊர்க்காவல் படையை சேர்ந்த விபிஷ்ணன் என்பவர் எனது தந்தையை ஆபாசமாக திட்டி வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் துரை, சாமிக்கண்ணு மகன் சசிக்குமார், செல்வராஜ் மகன் மணிகண்டன், ஏழுமலை மகன் ஜெகன்ராஜ் ஆகியோரும் வழக்கை வாபஸ் பெறவில்லையெனில் அடித்து கொலை செய்து விடுவதாக எனது தந்தையை மிரட்டியுள்ளனர்.

இதில் மனமுடைந்த எனது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்