வேளாண்மை தொழில்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும்

நடப்பு நிதியாண்டில் வேளாண்மை தொழில்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-29 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட வங்கியாளர்கள் சிறப்பு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி வங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர், “2018 - 2019-ம் நிதியாண்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5,008 கோடியும், குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய தொழில் துறைக்கு ரூ.752 கோடியும், சேவைத் துறை மற்றும் இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ.850 கோடியும் ஆக மொத்தம் ரூ.6,610 கோடி தொகை முன்னுரிமை வங்கி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.153 கோடி கூடுதல் ஒதுக்கீடாகும்“ என்றார்.

முன்னதாக ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2017-2018 நிதி ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வறிக்கையினை கலெக்டர் வெளியிட்டார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிச்சை, மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் (நாகர்கோவில் மண்டலம்) சீனிவாசன், பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் லெட்சுமி, வங்கியாளர்கள் மற்றும் அரசு துறைகளைச் சார்நத அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்