உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், முத்தரசன் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.
விருதுநகர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளை விட உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டவை. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை கண்டு அஞ்சும் அ.தி.மு.க. அரசு, ஏதாவது ஒரு காரணத்தை கூறி தேர்தலை நடத்தாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை மேலும் தாமதிக்காமல் நடத்த தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 4–ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்காத பட்சத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன.
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து 5–ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதனை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசுகின்றனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. தேவையான நிதி ஒதுக்கீடு செய்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பயங்கர வாதிகள் ஊடுருவி உள்ளதாக மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு என தனித்தனியே உளவுத்துறை உள்ள நிலையில் மத்திய மந்திரியின் இந்த தகவலுக்கு முதல்–அமைச்சர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. மாநில உளவுத்துறையினர் பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் கண்காணிக்காமல் எங்களை போன்ற எதிர்க்கட்சி தலைவர்களை தான் கண்காணித்து வருகின்றனர். கருப்பு பணத்தை ஒழிப்போம் என மோடி அரசு தெரிவித்த நிலையில் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணம் 50 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
பிரதமர் மோடி ஓய்வு எடுக்கவே பாராளுமன்றத்துக்கு வருவார். நேரு, இந்திராகாந்தி, சாஸ்திரி, வி.பி.சிங் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களை போல தற்போதைய பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதே இல்லை. அவர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு வருவதே தனது ஆடைகளை மாற்றிவிட்டு புதிய ஆடைகளுடன் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காகத்தான்.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்தபடி வத்திராயிருப்பை தனி தாலுகாவாக அறிவிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலை இருந்து வருகிறது. வத்திராயிருப்பை தாலுகாவாக்க அரசு தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணை பொதுச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் லிங்கம், முன்னாள் எம்.பி. அழகர்சாமி,முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் காதர்மெய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து நடந்த மாவட்டக்குழு கூட்டத்திலும் முத்தரசன் கலந்து கொண்டார்.