காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2018-06-29 22:30 GMT
கீரமங்கலம்,

காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் தொடங்கி, திருவரங்குளம் ஒன்றியம், அறந்தாங்கி, மணமேல்குடி ஒன்றியம் வரை சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி கடைமடைப் பாசன பகுதிகளாக உள்ளன. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் 6 நாட்களுக்கு பிறகே கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும். இதனால் கீரமங்கலம் பகுதியில் உள்ள கறம்பக்காடு, செரியலூர், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, ஆயிங்குடி போன்ற கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரும் முன்பே தண்ணீர் அடைக்கப்படுகிறது, இதனால பல வருடங்களாக புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப் பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்காததால் கடைமடைப் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் கடைமடைப் பாசன ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் செடிகள், அதிகமாக வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது. தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னே இந்த புதர்களை வெட்டி அகற்றி சீரமைத்தால் தண்ணீர் திறக்கப்பட்டதும் ஒரு நாள் முன்னதாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. தண்ணீரும் தடையின்றி பாய்ச்ச வசதியாக இருக்கும். ஆனால் கடைமடைப் பாசனப் பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் மராமத்து பணிகள் எதுவும் நடக்காததால் புதராகவே காட்சி அளிக்கிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன் மற்றும் கடைமடைப் பாசன விவசாயிகள் கூறியதாவது:- கடை மடைப் பாசனம் என்பது உபரி நீரை நம்பி விவசாயம் செய்வது போல தான். தொடர்ந்து தண்ணீர் வந்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் ஆனால் கடந்த பல வருடங்களாக முறை தண்ணீர் என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தண்ணீர் திறப்பதும். அடுத்த 5 நாட்கள் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொள்வதும் வழக்கமாக இருப்பதால் பயிர்கள் கருகிவிடுகிறது. இந்த நிலையில் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வரும் வாய்க்கால்களில் புதர் மண்டியுள்ளது. இதனால் தண்ணீரும் வந்து சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் தண்ணீர் திறக்கும் முன்பே புதர்களை அகற்றி ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

மேலும் செய்திகள்