நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் பதிவாளர் சந்தோஷ் பாபு தகவல்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தற்காலிக பணி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வணிகவியல், உடற்கல்வியியல், உளவியல், உயிரி தொழில்நுட்பம், தாவர அறிவியல், தகவல் தொழில் நுட்பம், விலங்கு அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், தொடர்பியல், வரலாறு, தமிழ், புவி தொழில்நுட்பம், வேதியியல், பொருளாதாரவியல், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகவியல், கல்வியியல், குற்றவியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை மற்றும் இளம் முனைவர் (எம்.பில்.) பாடங்கள் கற்பிக்க தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
பல்கலைக்கழக நிதி நல்கை குழு விதிகளின்படி பேராசிரியர் பணிக்கு கல்வி தகுதி உடையவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த பகுதிக்கு தகுதி உள்ளவர்கள் www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பத்துடன், செயலாக்க கட்டணம் ரூ.500 வங்கி வரைவோலையாகவோ அல்லது இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி வரைவு சீட்டு பெற்று அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் சுய விவர குறிப்புடன் அனைத்து சான்றொப்பமிட்ட நகல்களுடன் வருகிற 6–ந்தேதிக்குள் பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.