திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் நின்ற லாரி 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2018-06-29 00:27 GMT
தாளவாடி,

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டு இருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வந்துகொண்டு இருந்தது.

அப்போது அந்த வளைவில் திரும்ப முடியாமல் கன்டெய்னர் லாரி நடுரோட்டில் அப்படியே நின்றுவிட்டது. லாரி டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் லாரியை திருப்ப முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணி அளவில் மற்றொரு லாரி டிரைவர் வந்து கன்டெய்னர் லாரியை திருப்பினார். இதையடுத்து வாகனங்கள் மேற்கொண்டு சென்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் வாகனங்களில் வருபவர்கள் குளிரால் அவதிப்பட வேண்டியுள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் அச்சத்தில் உள்ளோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கக்கூடாது’ என்றனர்.

மேலும் செய்திகள்