பல ஆண்டுகளுக்கு பிறகு கம்பம் சேனைஓடை தூர்வாரும் பணி தீவிரம்

கம்பம் நகராட்சியின் மையப்பகுதியில் சேனைஓடை செல்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓடை தண்ணீரின் மூலம் விவசாயம் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது சேனை ஓடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கி விட்டது.

Update: 2018-06-29 00:16 GMT
கம்பம்.

மேலும் நகரில் உள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேனை ஓடையில் தான் கலக்கிறது. இவையல்லாமல் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி உள்ளதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

எனவே இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில வருடங் களுக்கு முன்பு ஓடையை தூர்வாருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓடையை யார் தூர்வாருவது? என்ற குழப்பத்தில் ஒடை தூர்வாரும் பணி கைவிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கம்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேனை ஓடையை தூர்வாருவது குறித்து நகராட்சி கமிஷனர் சங்கரன் எடுத்து கூறினார். இதையடுத்து பொதுமக்களின் சுகாதாரம் கருதி நேற்று முதற்கட்டமாக பொக்லைன் உதவியுடன் கம்பம் நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி அருகே சேனைஓடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரப்பட்டது.

இந்தபணி நகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் வரலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு சேனைஓடை தூர்வாரும் பணி நடைபெறுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், பொதுமக்களின் சுகாதாரம் கருதி பல ஆண்டுகளுக்கு பிறகு பொது நிதி மூலம் முதற்கட்டமாக சேனை ஓடை தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அருகில் உள்ள வீடுகளில் இருந்து மனித கழிவுகளை சேனைஓடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேனை ஓடையில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்