தனியார் மருத்துவமனை ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் மோசடி

தனியார் மருத்துவமனை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-28 23:45 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திண்டுக்கல் அருகேயுள்ள குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் எரியோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 480 வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இவருடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்து இருந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் சென்று புகார் செய்தார். இதையடுத்து அவருடைய வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டதை வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில் அவர் வைத்திருக்கும் ஏ.டி.எம். எண் கொண்ட போலியான ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அதே ரகசிய எண் மூலம், சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதில் 26-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம், 2-வது கட்டமாக ரூ.15 ஆயிரம் மற்றும் 3-வது கட்டமாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தண்டபாணி நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்