நின்ற லாரி மீது கார் மோதியதில் தந்தை-மகன் உள்பட 3 பேர் பரிதாப சாவு

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2018-06-28 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கீழ் குள்ளவீரம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (வயது 62). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (45). இவரும் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் தட்சிணாமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மணியும், ராஜேந்திரனும் அவரை பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச்சென்றனர்.

பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் அவர்கள் 3 பேரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பக்கமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரமாக நின்ற டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மணி, அவரது மகன் தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூளகிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் மேட்டூர் அருகே கீழ் குள்ளவீரம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்