பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் டெபாசிட் இழக்கும் தங்கதமிழ்ச்செல்வன் பேச்சு
பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
உசிலம்பட்டி,
பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
உசிலம்பட்டி தேனி சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டசெயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பொது செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அவர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதிய பொறுப்பாளர்களை விரைவில் தேர்வு செய்து தலைமைக்கழகத்திற்கு கொடுக்க வேண்டி இருப்பதால் உடனடியாக செயல்படக்கோரி பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது தங்கதமிழ்ச்செல்வன் பேசியதாவது:- 18 எம்.எல்.ஏக்களை நீக்கியதும், அதனை விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்துவதும் சூழ்ச்சியான அரசியல் நடத்துவதை காட்டுகிறது.
இப்போதைய அமைச்சர்கள் வரும் எந்த தேர்தலிலும் நிற்க முடியாது, மக்கள் அனைவரும் விழித்துக்கொண்டனர். உண்மையான அ.தி.மு.க.வினர் அனைவரும் அ.ம.மு.க.வில் உள்ளனர். வருகிற பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அவசியம் டெபாசிட்டை இழக்கும்.
இப்போதைய சூழ்நிலையில் நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் போதும், எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க ரெடியாக இருக்கிறார். எங்களுக்கு பணம் முக்கியமில்லை, மக்களின் நலன்தான் முக்கியம். டி.டி.வி.தினகரன் தலைமையிலான ஆட்சி அமையும் வரை மக்களிடம் நம்பிக்கை துரோகிகளின் செயல்பாடுகளை எடுத்து கூறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, சேடபட்டி ஒன்றியசெயலாளர் துரை.தனராஜன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, உசிலம்பட்டி ஒன்றியசெயலாளர் சேதுராமன், நகரசெயலாளர் குணசேகரபாண்டியன், எழுமலை பேரூர் கழக செயலாளர் பக்ரூதீன், பேரவை செயலாளர் ஜோதிதண்டியப்பன், வழக்கறிஞரணி செயலாளர் வீரபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.