தமிழகத்தில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவில்பட்டிக்கு 23–வது இடம்
தமிழகத்தில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவில்பட்டிக்கு 23–வது இடம் கிடைத்து உள்ளது என்று கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா தெரிவித்து உள்ளார்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவில்பட்டிக்கு 23–வது இடம் கிடைத்து உள்ளது என்று கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தரவரிசை பட்டியல்
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ், தூய்மையான நகரங்கள் குறித்து ஸ்வட்ச் சர்வேக்ஷான் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பொது சுகாதாரம், தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், துப்புரவற்ற கழிப்பறைகளை முற்றிலுமாக அழித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் நகரின் தூய்மை குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்டல் முதலிய வகையினங்களில் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய அளவில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மேற்படி ஆய்வில் இந்திய அளவில் 5 மண்டலங்களாக பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், தென் இந்திய அளவிலான மண்டலத்தில் 1,113 நகரங்களில் கோவில்பட்டி நகரசபை 112–வது இடத்தை பிடித்து உள்ளது. தமிழக அளவில் தூய்மையான நகரங்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் 23–வது இடத்தை பிடித்து உள்ளது.
நகரினை தூய்மையாக வைத்து கொள்ள...
இதற்கு சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், அலுவலர்களின் பங்கு முக்கியமானதாகும். மேலும் இதற்கு முக்கிய பங்காற்றிய பொதுமக்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், வணிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கோவில்பட்டி நகரசபை சார்பில் நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் இந்த தரவரிசையில் முன்னேற்றம் காண்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த தரவரிசை பட்டியலானது நகரத்தின் சுகாதாரத்தினை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாறுகாலில் குப்பைகளை கொட்டக் கூடாது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, நகரினை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா தெரிவித்து உள்ளார்.