ஜெயலலிதா பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
ஜெயலலிதா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாநகராட்சியின் 63–வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராஜா எஸ்.சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் ஜெயலலிதா பேரவையின் துணைச்செயலாளராக உள்ளேன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 19–ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, ‘ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தால் வெற்றிபெற்ற 18 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார்.
இவ்வாறு அவர் பேசியது ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாழ்க்கைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர் ஜெயலலிதா. அவருடைய பிரசாரத்தாலும், அ.தி.மு.க.வின் தொண்டர்கள் அளித்த வாக்குகளாலும் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆக வெற்றிபெற்று அமைச்சர் பதவி பெற்றுள்ளார். அவரது பேச்சு சட்டப்படி குற்றமாகும். அவரது இந்த நடவடிக்கையால் நானும், கட்சி தொண்டர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
அ.தி.மு.க. அமைச்சரே ஜெயலலிதா மீது குற்றம்சுமத்தும் வகையில் பேசியிருப்பது தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 499, 500, 503, 504 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேடசந்தூர் போலீசில் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.