வருசநாடு அருகே வனத்துறை ஊழியர் அடித்துக் கொலை விவசாயி கைது
வருசநாடு அருகே வனத்துறை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு,
தேனி அல்லிநகரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவா(வயது27). வனத்துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் உறவினரான வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தை சேர்ந்த விவசாயி சவுந்தர்(33) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி சிவா முருக்கோடை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தார். அப்போது சவுந்தருக்கும், சிவாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சிவாவை சவுந்தர் கம்பால் தாக்கினார். அதையொட்டி முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த சிவா க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடார்பாக வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.