வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு
வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டிய நிலையில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல்போகத்துக்கும், அக்டோபர் மாதத்தில் இரண்டாம் போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி வைகை அணையில் இருந்து ஜூலை 4–ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முடிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னரே இன்று (வியாழக்கிழமை) முதல் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதன்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறப்பது என்றும், தண்ணீரின் இருப்பை பொறுத்து 120 நாட்கள் வரையில் தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.