ஆமை வேகத்தில் நடக்கும் ஆவாரம்பாளையம் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-27 23:00 GMT

கோவை,

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் வழியாக தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக தினமும் 70–க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்வதால், ரெயில் வரும்போது கேட் திறந்து மூடப்படும். இதனால் ஆவாரம்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அங்கு மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து எங்கிருந்து எங்கு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்ததில், ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருந்து ரெயில்வே கேட்டை கடந்து இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வரை 770 மீட்டர் தூரத்துக்கு ரூ.26 கோடியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் மேம்பாலத்தின் இருபுறத்திலும் 16 அடி அகலத்தில் சேவை சாலை அமைக்கப்படும் என்றும், அந்த வழியாக நடந்து செல்பவர்கள், தண்டவாளத்தை எளிதாக கடப்பதற்காக தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் சுரங்கப்பாதையும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆவாரம்பாளையம் ரோட்டின் இருபுறத்திலும் 1½ ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, யாருடைய நிலம் தேவை என்று நோட்டீசும் வினியோகிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ரெயில்வே துறை சார்பில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்னும் மேம்பாலம் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் கூட தொடங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் ரெயில்வேத்துறை மேம்பாலம் அமைக்க கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளும் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறப் படுகிறது.

இது குறித்து ஆவாரம்பாளையம்–கணபதி மேம்பால போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் கூறியதாவது:–

ஆவாரம்பாளையம் ரோட்டில் 12 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் பாலம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து நிதி ஒதுக்கியதும், ரெயில்வேத்துறை தனது பணியை தொடங்கியது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடிப்படை பணிகள் கூட தொடங்காததுதான் வேதனை அளிக்கிறது.

இந்த மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 45 நில உரிமையாளர்களிடம் ஒரு சதுர அடிக்கு ரூ.3500 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதை நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டு, நிலம் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதமும் கொடுத்தனர். ஆனால் இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அதற்கான இழப்பீடு தொகையும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

மேம்பாலம் பணி எப்போது தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அவர்கள் நிலத்தை கையகப்படுத்தி எங்களிடம் ஒப்படைத்துவிட்டால் நாங்கள் உடனடியாக பணியை தொடங்கி விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டால், நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது, விரைவில் கையகப்படுத்தி விடுவோம் என்று கூறுகிறார்கள்.

நிலத்தை கொடுக்க அனைவரும் தயாராக இருக்கிறார்கள். அதற்கான பணத்தை கொடுத்தால்போதும். ஆனால் அதுகூட வருவாய்த்துறை அதிகாரிகள் செய்ய மறுக்கிறார்கள். இது தொடர்பாக கேட்டால் தெளிவான பதிலை தெரிவிப்பது இல்லை. மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு 1½ வருடத்தில் பணிகள் முடிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

தற்போது மேம்பால பணிகள் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளே இன்னும் தொடங்கப்படாததால் மற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலம் போன்று இந்த பாலத்தையும் விட்டுவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும். மேலும் இங்குதான் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.

மேம்பால பணிகள் காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவாரம்பாளையம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்