சுருக்குவலையை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை

சுருக்குவலையை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி கூறினார்.

Update: 2018-06-27 23:00 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், மீன்வளத்துறை துணை இயக்குனர் செல்வன், உதவி இயக்குனர் கங்காதரன் மற்றும் காவல்துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

கருத்தாப்பிள்ளை(அன்னப்பன்பேட்டை):- எங்கள் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். சாலை வசதி செய்து தர வேண்டும்.

பழனிவேல்(சங்கொலிக்குப்பம்):- தொழிற்சாலைகளின் காரணமாக சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம், காரைக்காடு, குடிகாடு உள்ளிட்ட 10 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கலெக்டர்:- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படும். மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

தங்கமணி(சோனங்குப்பம்):- சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் மீன்பிடி தடைகாலம் முடிந்து 2 நாட்களுக்கு பிறகு தேவனாம்பட்டினம் மீனவர்கள் கையில் ஆயுதங்களுடன் படகில் சென்று கடலில் மீன்பிடித்து வருகிறார்கள். சுருக்குவலையை பயன்படுத்துவதற்கான தடை ஆணையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை மீறி செயல்படும் தேவனாம்பட்டினம் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை, அவர்கள் மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் அனைவரும் ரேஷன்கார்டு, ஆதார் அட்டைகளை தங்களிடம் ஒப்படைத்துவிடுகிறோம். (இவருடைய ஆவேசமான பேச்சுக்கு மற்ற மீனவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.)

என்.பி.நாராயணன் (கடலூர் முதுநகர்):- சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்களின் பெருக்கம் குறைந்துவிடும். ஏழை, எளிய மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே சுருக்குவலையை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் தண்டபாணி:- சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த பிரச்சினை 18 ஆண்டுகால பிரச்சினை. ஒரே நாளில் தீர்வு காண முடியாது. உரியகாலத்தில், உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனவே நீங்கள் யாரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை இழக்க வேண்டாம். இதேபோல் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்