ரெயில் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் தரம் உயர்த்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் தரம் உயர்த்தப்படுமா என பயணிகள் எதிர்ப்பார்கின்றனர்.

Update: 2018-06-27 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் திருச்சி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே புறக்காவல் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் 4 போலீசார் பணியில் உள்ளனர்.

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை ரெயில் நிலையம் வரை ரெயில்வே தண்டவாளத்தில் எந்தஒரு விபத்து ஏற்பட்டாலும், திருச்சி ரெயில்வே போலீசார் தான் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்த வேண்டும். இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்குடி ரெயில் நிலையம் வரை ரெயில்வே தண்டவாளத்தில் எந்தஒரு விபத்து ஏற்பட்டாலும் காரைக்குடி ரெயில்வே போலீசார் தான் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் சில நேரங்களில் விபத்து நடைபெற்ற பல மணி நேரங்கள் கழித்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வருகின்றனர். இதனால் விபத்து குறித்து முறையாக விசாரணை நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இதேபோல அடையாளம் தெரியாத நபர் ரெயில் மோதி இறந்தால், அது குறித்து விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தி, கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்