சட்டசபை கூட்டம் நடக்க இருப்பதால் 20 நாட்களுக்கு போராட்டம், ஊர்வலம் நடத்த தடை

சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதையொட்டி புதுவையில் அடுத்த 20 நாட்கள் போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-06-27 22:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் தொடர்பான கூட்டம் அடுத்த மாதம்(ஜூலை) 2–ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த 4–ந் தேதி சட்டசபை கூடியபோது பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்..

இந்த நிலையில் வருகிற 2–ந் தேதி தொடங்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையொட்டி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில் கூறியிருப்பதாவது:–

புதுவையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சிகள், சங்கங்கள் நடத்தும் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் தனிநபர் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டு அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே புதுச்சேரி காவல்துறை கிழக்கு பகுதிகளில் அடுத்த மாதம்(ஜூலை) 2–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை அதாவது 20 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்த வேண்டும் என்றால் 2 நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், மதம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்