நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2 புதிய முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகம் பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2 புதிய முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.

Update: 2018-06-27 21:00 GMT

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2 புதிய முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதிய பட்டப்படிப்புகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டப்படிப்பில் (எம்.எஸ்.சி) தரவு பகுப்பாய்வு, இணையப்பாதுகாப்பு என்ற 2 புதிய பாடப்பிரிவுகள் குறைந்த கல்விக்கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தகவல் தொழில்நுட்பம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய 3 துறைகளுடன் இணைந்து நடத்தும் இந்த புதிய பட்ட மேற்படிப்புகள் மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரும் வேலைவாய்ப்புகளை தரக்கூடிய படிப்புகள் ஆகும்.

எம்.எஸ்.சி. தரவு பகுப்பாய்வு என்பது ஒரு வணிகம் அல்லது துறை சார்ந்த தரவுகளின் தொகுப்பை சரியான பகுப்பாய்வு உத்திகளின் மூலம் முறையாக பகுப்பாய்வு செய்து மறைந்து கிடக்கும் பயனுள்ள தகவல்களை பெறும் தொழில்நுட்பம் ஆகும். இந்த படிப்பில் பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.பி.ஏ., எம்.பி.ஏ., பி.இ. படிப்புக்கு சமமான படிப்பு படித்தவர்கள் சேரலாம்.

மாணவர் சேர்க்கை

எம்.எஸ்.சி. இணையப்பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்துவகை பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் தரகுகளை முறையாக பாதுகாப்பது, திருட்டு போகாமல் தடுப்பது, அழியாமல் தடுப்பது, இணையவழி குற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்யலாம். இந்த படிப்பில் பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.இ. படிப்புக்கு சமமான படிப்பு படித்தவர்கள் சேரலாம்.

இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்