காங்கிரஸ் தலைவர்களிடம் குமாரசாமி புகார்

காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் குமாரசாமி புகார் செய்துள்ளார். கருத்துக்கூற சித்தராமையாவுக்கு தடை விதிக்குமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-06-27 00:32 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கூட்டணி ஆட்சி மீது குறிப்பாக முதல்-மந்திரி குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். தான் தாக்கல் செய்த பட்ஜெட்டையே அமல்படுத்த வேண்டும் என்று சித்தராமையா சொன்னார். இதை நிராகரித்துவிட்ட குமாரசாமி புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தேதி முடிவு செய்து அறிவித்துவிட்டார்.

இதனால் சித்தராமையா கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்று சித்தராமையா கூறி இருக்கிறார். இதுதொடர்பாக சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையாவின் இந்த பேச்சு, கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக சித்தராமையா மீது காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் குமாரசாமி புகார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தராமையாவின் கருத்துகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும், அவர் பகிரங்கமாக கருத்து கூற தடை விதிக்க வேண்டும் என்றும் குமாரசாமி வலியுறுத்தியதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்