ரூ.80 கோடி மதிப்பிலான ஐம்பொன்சிலைகள் திருட்டு வழக்கில் கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டங் களில் ரூ.80 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கில் கைதானவரின் ஜாமீன் மனுவை கும்பகோணம் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Update: 2018-06-26 22:15 GMT
கும்பகோணம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் மணிகண்டேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சிவன்பார்வதி ஐம்பொன் சிலையும், வந்தவாசி அருகே சவுந்தரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ஆதிகேசவபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்த வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய ஐம்பொன் சிலைகளும் கடந்த 2015-ம் ஆண்டு திருட்டுபோனது.

திருட்டுப்போன சிலைகளின் மதிப்பு ரூ.80 கோடி என கூறப்படுகிறது.

இந்த சிலைகளை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் தனலிங்கம் என்பவர் மோட்டார் சைக்கிளில் விற்பதற்காக கொண்டு சென்ற போது போலீசார் தனலிங்கத்தை கைது செய்து சிலைகளை மீட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை காவாங்கரையை சேர்ந்த ஜெயக்குமார்(வயது45) என்பவரை கடந்த 20-ந் தேதி கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நேற்று கும்பகோணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்