அகழிகள் வெட்டி வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை
திருப்புவனம், திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையோரம் அகழிகள் வெட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்புவனம்,
இந்தநிலையில் திருப்புவனத்தில், மதுரை–திருப்புவனம்–அருப்புக்கோட்டை குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வைகை ஆற்றின் கீழ்பகுதியில் திருப்புவனம் புதூர், மடப்புரம் மற்றும் பல கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இங்கு நடைபெறும் மணல் திருட்டால் குடிநீர் திட்டங்களுக்கான நீராதாரம் குறைந்து வருகிறது.
ஆற்றின் கரையோரம் முந்தைய காலங்களில் குடிநீர் ஆதாரம் நிறைவாக இருந்தது. தற்போது பருவமழை பொய்த்து போனது, மணல் திருட்டு உள்ளிட்ட காரணங்களால் நீராதாரம் வெகுவாக குறைந்துவிட்டது. மணல் திருட்டால் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேது, உமாதேவி, பால்பாண்டி மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணி துறையினர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் திருட்டு மணல் அள்ளிச்செல்வதாக கூறப்படும் கரையோர ஆற்று வழிப்பாதை, கால்வாய் பாதை, வயல்வெளி பாதையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பெரிய அளவில் அகழிகள் தோண்டப்படுகின்றன. இதன்மூலம் மணல் திருட்டுக்கு வாகனங்கள் செல்லாதவாறு பாதைகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.