குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்தவர் ஜெ.ராஜா என்ற ராக்கெட் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:–
சென்னை தேனாம்பேட்டை போலீசார் என்னை மே 9–ந்தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நான் கைது செய்யப்பட்ட தகவலை போலீசார் எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இந்நிலையில் என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஜூன் 9–ந்தேதி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் நான் கைது செய்யப்பட்டேன். என்னை குண்டர் தடுப்புக்காவலில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நான் ஜாமீன் கேட்டு நான் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கான காரணம் உத்தரவில் விளக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.
மனு தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 10–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.