தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த விவரத்தை தெரியப்படுத்தாதது ஏன்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த விவரத்தை தெரியப்படுத்தாதது ஏன் என்று தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-26 22:30 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த திலக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதையடுத்து விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து மில்லர்புரம் ஆயுதப்படை முகாமில் காவலில் வைத்து உள்ளனர். இதுகுறித்து ஆயுதப்படைக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சென்று ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

கடந்த மாதம் 21–ந்தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவின் முழு விவரத்தையும் தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோதமாக யாரையும் கைது செய்யக்கூடது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “144 தடை என்பது பொதுவாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தான். அதை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு தர மறுக்கிறீர்கள்?“ என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு அடுத்த மாதம் 4–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்