வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன் - நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
“என் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன்“ கோத்தகிரியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர் தனது சொந்த வேலையாக நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் வந்தார். பின்னர் கோத்தகிரி தாலுகாவில் தனது உறவினருக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்டாவாக மாற்ற விண்ணப்பித்து அதுகுறித்து கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியத்துடன் சுமார் 1 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். தனது ஆவண சம்பந்தமான பணியை முடித்து விட்டு 2.15 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை நான் சட்ட ரீதியாக எதிர்கொண்டு குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன். என்னை தலைமறைவு குற்றவாளி எனவோ அல்லது குற்றவாளி எனவோ காவல்துறை சார்பில் தான் கூறவேண்டும். அவர்கள் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை. எனக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பல முறை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல தான் தற்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான் கோத்தகிரிக்கு வந்தது தாசில்தார் அலுவலகத்தில் நிலம் சம்பந்தமாமன சொந்த விஷயத்திற்காக தான். இங்கு வந்த பின்பு தான் தாசில்தார் அலுவலக வளாகத்தின் தரைதளத்தில் கோர்ட் செயல்படுகிறது என்று தெரிந்தது. எனவே நான் வழக்கு சம்பந்தமாக கோத்தகிரி கோர்ட்டிற்கு வந்தேன் என்று செய்தி போட்டு விடாதீர்கள். என் மீதாக வழக்கு நிலுவையில் உள்ளதால் அது சம்பந்தமான கருத்துக்கள் குறித்து பேட்டி அளிக்க முடியாது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வழக்குகள் பதிவது என்பது சாதாரணமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கேட்டு கொண்டதன் பேரில் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.