இரட்டிப்பு பணம் தருவதாக கோவையில் ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்து ரூ.20 கோடி மோசடி, 4 பேர் கைது

கோவையில் இரட்டிப்பு பணம் தருவதாக ஏராளமானவர்களிடம் ரூ.20 கோடி வசூலித்து மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-26 22:30 GMT

கோவை,

கோவை ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவில் ‘ஒயிட் காலர் அசோசியேசன்’ என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் சிவக்குமார்(வயது45). இவர் தனது மனைவி விமலா (38), மாமியார் லட்சுமி (62), நண்பர் முருகேசன் (48), அவருடைய மனைவி பிரியா(42) ஆகியோருடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் சிவக்குமார் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வதால் அதிக லாபம் வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் சிவக்குமார் மற்றும் அவருடைய நிதி நிறுவனத்தினர் ஆசைவார்த்தை கூறினார்கள். இதை நம்பி கோவை போத்தனூர், சுந்தராபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.

முதலில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் வாரம் ரூ.2 ஆயிரம் வீதம் 10 வாரங்களில் ரூ.20 ஆயிரம் வரை பணத்தை திருப்பி கொடுத்து உள்ளனர். சிறிய தொகைக்கான பணத்தை இரட்டிப்புடன் திருப்பி கொடுத்ததால் இந்த நிறுவனம் மீது நம்பிக்கை அடைந்த சிலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய தொடங்கினர். உறவினர், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்களையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர்.

இதனால் டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்தனர். சுமார் 1,500–க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் உள்பட 4 பேரும் நிறுவனத்தை பூட்டி விட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமாரின் சொந்த ஊர் கரூர் என்பதால் அவர் அங்கு பதுங்கி இருப்பதாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற வாடிக்கையாளர்கள் கரூர் போலீசில் புகார் செய்தனர். ஆனாலும் நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய முடியவில்லை.

இதையடுத்து அவரை பிடிக்க வாடிக்கையாளர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நிதி நிறுவன உரிமையாளரின் கார் டிரைவர், வீட்டில் வேலை செய்பவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில், கரூரில் சிவக்குமார் இருக்கும் இடம் தெரிந்தது. உடனே வாடிக்கையாளர்கள் விரைந்து சென்று சிவக்குமார், அவருடைய மனைவி விமலா, மாமியார் லட்சுமி ஆகிய 3 பேரையும் மடக்கிப்பிடித்து காரில் ஏற்றி கோவை கொண்டு வந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுப்பதற்காக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன் திரண்டு நின்றனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நேரு தலைமையில் போலீசார், பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு நேரு கூறியதாவது:–

நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார், அவருடைய மாமியார் லட்சுமி, நண்பர் முருகேசன், அவருடைய மனைவி பிரியா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிவக்குமாரின் மனைவி விமலா உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். கைதான 4 பேர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் மோசடி செய்து உள்ளதால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து உள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா போலீசிலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் கைதான தகவல் அறிந்ததும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்து தாங்கள் பணத்தை இழந்தது குறித்து புகார் தெரிவித்தனர்.

ரூ.20 கோடி மோசடி செய்த 4 பேர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்