பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கு: ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்பட 10 பேரிடம் விசாரணை

பழனி முருகன் சிலை மோசடி வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் நேற்று பழனி கோவிலில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

Update: 2018-06-26 23:15 GMT

பழனி,

பழனி முருகன் கோவிலில் மூலவராக நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்ததாக கூறி, புதிதாக ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலை நவபாஷாண சிலைக்கு முன்பு வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கடந்த 2004–ம் ஆண்டு ஐம்பொன் சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில், துணை சூப்பிரண்டு கருணாகரன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அதில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா மற்றும் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை பழனியில் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் இல்லத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் இணை ஆணையர்களாக வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஜெயராமன், தங்கராஜ், பாஸ்கரன், ராஜமாணிக்கம், ராஜா ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

இதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் பணியாற்றி விட்டு, தற்போது கோவையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக வேலை பார்த்து வரும் ராஜமாணிக்கம், ராமேசுவரத்தில் இணை ஆணையராக பணியாற்றும் மங்கையர்கரசி, திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மேனகா, சென்னை தலைமை இந்து சமய அறநிலையத்துறை அலுவலக இணை ஆணையர்கள் அசோக், சுதர்சன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் பழனி முருகன் கோவில் அதிகாரிகளாக வேலை பார்த்த காலங்களில் நடைபெற்ற திருப்பணிகள், நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி பணிகள், மூலவர் சிலைக்கு பதிலாக புதிய சிலை செய்தது குறித்தும், அவர்களுக்கு தெரிந்த கருத்துக்களையும், இப்பிரச்சினையில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது பற்றியும், விசாரணை நடைபெற்றதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகள்