அடுத்த 48 மணி நேரம்பலத்த மழை நீடிக்க வாய்ப்பு மும்பை, தானே வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மும்பை, தானேயில் கனமழைக்கு சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். அடுக்குமாடி கட்டிடம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் குடியிருப்புவாசிகள் பீதியில் உறைந்து உள்ளனர்.

Update: 2018-06-25 23:56 GMT
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு மேலும் தீவிரம் அடைந்தது. இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய, விடிய பேய் மழை கொட்டி தீர்த்தது.

அதன்பின்னரும் மழையின் வேகம் குறையவில்லை. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்துகொண்டே இருந்தது. மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் நாள் முழுவதும் மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொட்டி தீர்த்த கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சுன்னாப்பட்டி, வடலா, தாதர், காம்தேவி, சயான், சாந்தாகுருஸ், கிங்சர்க்கிள், நாக்பாடா, பைகுல்லா, அந்தேரி சப்வே, மரோல் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்து ஏரிகளாக காட்சி அளித்தன.

மும்பையின் பிரதான சாலைகளான கிழக்கு மற்றும் மேற்கு விரைவு சாலைகளிலும் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக இவ்விரு சாலைகளிலும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிங்சர்க்கிளில் கிழக்கு விரைவு சாலையில் இடுப்பளவு வெள்ளநீர் தேங்கியது. காலை அந்த வழியாக சென்ற பெஸ்ட் பஸ் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். கார், மலாடு, அந்தேரி சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பெஸ்ட் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டன.

பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் புகுந்தது. அவை குளமாக காட்சி அளித்தன.

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மும்பை மக்களின் உயிர் நாடியான மின்சார ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய 3 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.

கனமழை காரணமாக அலுவலகங்கள் செல்லும் பலரும் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து கொண்டனர். எனவே மின்சார ரெயில்களில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சில நீண்ட தூர ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. அரை மணி நேரம் வரையிலும் விமானங்கள் தாமதமாக இயங்கின.

கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இது தெரியாமல் பல பள்ளிகளுக்கு மாணவர்கள் கொட்டும் மழையில் குடைகளை பிடித்து கொண்டும், ரெயின் கோட் அணிந்தபடியும் வந்தனர். அதன்பின்னர் தான் அவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மீண்டும் அவர்கள் வீட்டை நோக்கி நடையை கட்டினர். சாலையில் தேங்கிய வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மழையின் போது, அண்டாப்ஹில் பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்கள் உள்பட 15 வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு மண்ணில் புதைந்தன.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இந்த நிலச்சரிவில் யாரும் சிக்கியிருக்கிறார்களா? என்பது உடனடியாக தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் வசிந்து வந்தவர்கள் பீதியின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வக்கீல்கள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள் வசித்து வருகின்றனர்.

மும்பை மற்றும் தானேயில் பெய்த பலத்த மழைக்கு 4 பேர் பலியானார்கள். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தென்மும்பை ஆசாத் மைதானம், மெட்ரோ சினிமா அருகே பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. எனவே அந்த பகுதியில் இருந்த பெரிய மரத்தின் கீழே சிலர் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் அந்த மரத்தின் ராட்சத கிளை ஒன்று திடீரென முறிந்து, மழைக்கு ஒதுங்கி நின்றவர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஜி.டி. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த பி.வி. பாஸ்டின் (வயது75) என்ற முதியவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையில் காயமடைந்த முதியவர் ராஜேந்திர குமார்(60) என்பவரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரம் விழுந்ததில் காயமடைந்த சந்தோஷ் சிங்(28), ராம்விலாஸ்(55) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவு உல்லாஸ்நகர் வடோல்காவ் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் கிரண் கெய்க்வாட் (15) என்ற சிறுவன் பலியானான். மும்பை மலாடில் நேற்று மழையின் போது, நாகேந்திர நாகார்ஜூன் (18) என்ற வாலிபர் எவர்சைன் நகர் அருகே சாக்கடைக்குள் தவறி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அந்தேரி கிழக்கில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராஜ்குமாரி கவுட் (37) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கூப்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதேபோல பைதோனியில் உள்ள மகாடா கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 23 செ.மீ. மழையும், கொலபாவில் 10 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதுதவிர விராரில் 18 செ.மீ., வசாயில் 18 செ.மீ., மாணிக்பூரில் 16 செ.மீ., மாண்ட்வியில் 19 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.

மும்பையில் அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. வரும் வாரங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் மிக கனமழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்