மராட்டிய சட்டமன்ற மேலவையின் 4 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மராட்டிய சட்டமன்ற மேலவையின் 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த. ஓட்டு எண்ணிக்கை வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

Update: 2018-06-25 23:43 GMT
மும்பை,

மராட்டிய சட்டமன்ற மேலவையின் மும்பை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதி, நாசிக் ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதி ஆகிய 4 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம்(ஜூலை) 7-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து மேற்கண்ட தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் பா.ஜனதா தனித்தனியாக போட்டியிட்டன.

மும்பை பட்டதாரிகள் தொகுதியில் பா.ஜனதாவின் அமித் மேக்தா, சிவசேனா வேட்பாளர் விலாஸ் பாட்னிஸ், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த ராஜேந்திர கோர்டே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், மராட்டிய சுகாதாரத்துறை மந்திரியான தீபக் சாவந்த்துக்கு சிவசேனா வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது.

இதேபோல மும்பை ஆசிரியர்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் சிவாஜி ஷிங்டே, பா.ஜனதா வேட்பாளர் அனில் தேஷ்முக் மற்றும் லோக் பாரதி உறுப்பினர் கபில் பாட்டீல் ஆகியோர் மோதிக்கொள்கின்றனர்.

மேலும் கொங்கன் பட்டதாரிகள் தொகுதியில் நிரஞ்சன் தவ்காரே(பா.ஜனதா), சஞ்சய் மோரே(சிவசேனா) மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த நஜீப் முல்லா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

நாசிக் ஆசிரியர்கள் தொகுதியில் சிவசேனா போட்டியிடவில்லை. அங்கு பா.ஜனதாவின் அங்கித் பாட்டீல் 23 சுயேட்சை வேட்பாளர்களுடன் மல்லுகட்டுகிறார்.

பட்டதாரிகள் தொகுதியில் அங்கு வசிக்கும் பட்டதாரிகளும், ஆசிரியர்கள் தொகுதியில் அங்குள்ள ஆசிரியர்களும் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றது. நாசிக் ஆசிரியர்கள் தொகுதியில் அதிகபட்சமாக 92.3 சதவீதம் வாக்குகள் பதிவானது. மும்பை ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதி மற்றும் மும்பை பட்டதாரிகள் தொகுதி ஆகியவற்றில் முறையே 83.2, 73.89 மற்றும் 53.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மும்பை பாந்திராவில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

மேலவை தேர்தலில் ஆளும் கூட்டணியான சிவசேனா மற்றும் பா.ஜனதா தங்களுக்குள் மோதிக்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடந்த 4 தொகுதிகளிலும் வருகிற 28-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்