பாணாவரம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலையில் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-25 21:52 GMT

பனப்பாக்கம்,

பாணாவரம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்தது பாணாவரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் தினமும் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பாணாவரம் ஊராட்சி நிர்வாகத்திடமும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலையில் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் எங்கள் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து போலீசார், உங்கள் கோரிக்கையை அதிகாரிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்