புதிய மின் மீட்டருக்கு எதிர்ப்பு: மின்துறை தலைமை அலுவலகத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. முற்றுகை
புதிய மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மின்துறை அலுவலகத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
புதுவை உப்பளம் தொகுதியில் உள்ள வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டை, வாணரப்பேட்டை, வீரர்வெளி, நேதாஜி நகர், தமிழ்த்தாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்துள்ள இடங்களான வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டை, வாணரப்பேட்டை போன்றவற்றில் கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தைவிட தற்போது 2, 3 மடங்கு கட்டணம் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டித்து சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நேற்று மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் கண்காணிப்பு பொறியாளர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மின் கட்டணம் அதிகமாக இருப்பது தொடர்பாக மறு ஆய்வு நடத்துவதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து நிருபர்களிடம் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மின் ஒழுங்கு முறை இணை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் புதுவை அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன் மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்தநிலையில் புதுவை நகரப்பகுதியில் பரிசோதனையில் இருந்த மின் மீட்டருக்கு பதிலாக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை சுமார் 34 ஆயிரம் இணைப்புகளில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
பழைய மின் மீட்டர் சுமார் ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதைய சீனாவின் மீட்டர் ஒன்று ரூ.14 ஆயிரம் என ரூ.48 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செலவும் மின் நுகர்வோரான மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவிக்கும் நிலையில் வெளிநாட்டில் இருந்து மின் மீட்டர் வாங்குவது தேவையற்ற ஒன்றாகும்.
புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வம்பாகீரப் பாளையம், திப்புராயப்பேட்டை, வாணரப்பேட்டை பகுதியில் முன்பிருந்த மீட்டரைவிட 3 மடங்கு அதிகமாக ரீடிங் காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தற்போது பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டரை பொருத்தும் அரசின் முடிவினை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.