கண்டராதித்தம் பெரிய ஏரியை தூர்வார கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு

கண்டராதித்தம் பெரிய ஏரியை தூர்வார கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-06-25 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

பாளையபாடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு கலெக் டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் கண்டராதித்த சோழ மன்னரால் 416 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆனால் தற்போது இந்த ஏரி முழுவதும் தூர்ந்து போய் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. மன்னரால் வெட்டப்பட்டதற்கு பின்னர் இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. எனவே, இந்த ஏரியை, தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, கரைகளில் பூங்கா அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரியலூரில் உள்ள பொதுநல சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள செட்டி ஏரி வரத்து வாய்க்கால் மற்றும் 100 அடி சாலையை ஆக்கிரமித்து குடியிருப்பு வீடுகளை கட்டியுள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். இங்குள்ள 48 ஏக்கரில் மனைப்பிரிவு அமைத்து வீடுகளை கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செட்டி ஏரிக்கு நீர் வரத்துக்கு ஆதரமாக இருந்த குரும்பன்சாவடி வரத்து வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமித்துள்ளதால், ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், தங்களது இடம் சாலை வரை உள்ளது என்று கூறி குத்துக்கல்லை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமும், அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 961 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்