எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு: கோர்ட்டில் மனுவை வாபஸ் வாங்குவதற்கு அவகாசம் தேவை தங்கதமிழ்செல்வன் பேட்டி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கில் மனுவை வாபஸ் வாங்குவதற்கு எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

Update: 2018-06-25 22:45 GMT

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க.வினர் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் வந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:–

கேள்வி:– எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரணை செய்ய 3–வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், உங்களை தவிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர், உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:– நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது தான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால், தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.

கேள்வி:– மனுவை வாபஸ் பெறுதில் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்களே?

பதில்:– மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளன. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3–வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனு வாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா?, அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது. பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி, நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என்னுடைய வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை. இதுகுறித்து வக்கீல்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

கேள்வி:– தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் கவர்னரை தடுத்தால் 7 ஆண்டு சிறை–அபராதம் விதிப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளதே?

பதில்:– இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? என்று தெரியவில்லை. சாதாரண தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். கவர்னர் ஆய்வு செய்யட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் நடைபெற்ற போது, ஏன் மக்களை அவர் சந்திக்கவில்லை.

கேள்வி:–கவர்னர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:– கவர்னர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசுக்கு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது.

கேள்வி:– சமீபகாலமாக உங்களுக்கும், உங்கள் அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வருகிறதே?

பதில்:– இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொதுச்செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

கேள்வி:– ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து?

பதில்:– ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு கூறி அவரால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டி.வி.தினகரன் செலவழிக்கிறார் என்ற பகிரங்கமாக கூறியிருக்கிறார். தற்போது உள்ள அரசாங்கத்தின் மூலம் நீங்கள் அடிக்கும் கொள்ளை குறித்து நாங்கள் இதேபோல வெளிப்படையாக கூறினால் நன்றாக இருக்குமா? ஜெயலலிதாவை பற்றி இப்படி குற்றம் சாட்டி பேசியிருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலகவேண்டும். இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உங்களை விரட்டி அடிப்பார்கள்.

கேள்வி:– போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கைது செய்யும் நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து?

பதில்:– அது தவறான செயல். உரிமைக்காக போராடுவது ஜனநாயக நாட்டில் சகஜம். அதனை அரசு உரிய முறையில் கையாண்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெகுண்டு எழுந்தால் தமிழக அரசால் தாங்கிக்கொள்ள முடியாது. அதுபோன்ற நிலைக்கு அரசு செல்லக்கூடாது.

கேள்வி:– சேலம்–சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் உங்கள் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு?

பதில்:– பசுமை வழிச்சாலைத்திட்டத்திற்கு எதிராக எங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் போராட்டம் நடத்தப்படும். போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அந்த சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீண். ஏனென்றால் அந்த சாலை திட்டம் நிறைவேறாது. மக்கள் முடிவை கேட்டு முடிவெடுக்கும்படி அறிவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்