சித்தராமையா சிகிச்சை பெறுவதால் மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் தள்ளிப்போகிறது

சித்தராமையா சிகிச்சை பெற்று வருவதால் மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் தள்ளிப்போகிறது.

Update: 2018-06-25 22:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடக மந்திரிசபையில் உள்ள 34 இடங்களில் 22 இடங்கள் காங்கிரசுக்கும், 12 பதவிகள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இதில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முதல்-மந்திரி பதவி உள்பட 11 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. அந்த கட்சிக்கு இன்னும் ஒரு இடம் காலியாக உள்ளது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 22 பதவிகளில் 16 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்சி வசம் இன்னும் 6 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன.

மந்திரி பதவி கிடைக்காத சில தலைவர்கள் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். நாளடைவில் அந்த எதிர்ப்பு அடங்கிவிட்டது. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு மந்திரி பதவி மற்றும் வாரிய தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சித்தராமையாவுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் வாரிய தலைவர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்தது. இதற்கு காங்கிரஸ் மேலிடமும் ஒப்புதல் வழங்கியது.

ஆனால் சித்தராமையா உஜ்ஜிரி ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் வாரிய தலைவர்கள் நியமனம் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. இதனால் மந்திரி மற்றும் வாரிய தலைவர் பதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்