அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை– ரூ.14 லட்சம் கொள்ளை: மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

பாளையங்கோட்டையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை–ரூ.14 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2018-06-24 20:30 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை–ரூ.14 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகை–பணம் கொள்ளை

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வருசபத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 52). இவர் சமாதானபுரத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலையில் 80 பவுன் நகை– ரூ.14 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டின் அருகில் உள்ள மரத்தின் வழியாக காம்பவுண்டுக்குள் குதித்த மர்மகும்பல், பின்பக்க கதவை உடைத்து பாண்டி வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு 2 பீரோக்கள், அலமாரியை உடைத்து 80 பவுன் நகை– ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் தீவிரம்

இதற்கிடையே மர்ம கும்பலை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்–இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், பழனிமுருகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் மர்ம கும்பல் விட்டு சென்ற தடயங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த நபர்கள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கேரள மாநிலம் தென்மலை பகுதிக்கு சென்று இருப்பதாக தெரிகிறது. உடனே தனிப்படை போலீசார் அந்தந்த ஊர்களுக்கு சென்று போலீசார் சந்தேகிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மர்ம கும்பலை அடையாளம் கண்டு வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்