ஈரோட்டில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் நாசம்

ஈரோட்டில், ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2018-06-24 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு கோட்டை ராமசாமி வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52). இவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சாமிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஜவுளிக்கடையில் இருந்து கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து ஜவுளிக்கடையில் இருந்த துண்டு, லுங்கிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஜவுளிக்கடையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

எனினும் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்தால் நள்ளிரவு நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி மயில்ராஜ் கூறும்போது, ‘மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஈரோட்டில் பெரும்பாலான தீ விபத்துகள் மின் கசிவு மற்றும் கியாஸ் சிலிண்டர் வெடிப்பதினால் ஏற்படுகிறது.

எனவே மின் சாதன பொருட்களை முறையாக பயன்படுத்தி மின் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் கடைகளில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து முறையாக பயன்படுத்த வேண்டும். மேலும் தீயணைப்பு அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்