கதிராமங்கலம் ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளி அமைய உள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்

கதிராமங்கலம் ஊராட்சியில் புதிதாக அரசு உயர்நிலைப்பள்ளி-ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

Update: 2018-06-24 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சி ஒட்டைக்கார தெருவில் புதிதாக அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார். மேலும் அவர், நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தற்காலிகமாக உயர்நிலைப்பள்ளி செயல்படுவதற்காக சின்னக்கடை தெருவில் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.

அப்போது அவர், சாலை வசதி, தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். கட்டிடத்தில் பழுதடைந்த இடங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக செயல்பட உள்ளது.

அந்த கட்டிடத்தை பார்வையிட்ட கலெக்டர், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் துகிலியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, வருகை பதிவேட்டை பார்வையிட்டு மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி, உதவி பொறியாளர் ஜவகர் ஆகியோர் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்