முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

தியாகதுருகம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-24 22:00 GMT
தியாகதுருகம்,

தியாகதுருகம் ஒன்றியம் பொறசக்குறிச்சி காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நேற்றும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கள்ளக்குறிச்சி- அசகளத்தூர் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கமலக்கண்ணன், மயில்சாமி, கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் மற்றும் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர்.

இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு உடனே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அனுமதியின்றி பொருத்தப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்