போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்த மோசடி ஆசாமிகள் சிக்கியது எப்படி? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த கும்பல் சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-06-24 22:00 GMT
கோவை

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்கும் எந்திரத்தில் கார்டு செருகும் இடத்தில் ஒரு கும்பல் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை கடந்த 6-ந் தேதி நூதன முறையில் திருடினார்கள். அன்று ஒரே நாளில் 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் அபேஸ் செய்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கோவையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் மல்லிகா, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, கார்த்திக், ஆனந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி அருகே நவசாந்தன் (வயது 29), நிரஞ்சன்(38), தமிழரசன்(26), வசீம்(30). கிஷோர்(25), மனோகரன்(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து 2 சொகுசு கார்கள், 2 மடிக்கணினிகள், ஒரு கார்டு ரீடர், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை சிங்காநல்லூர் ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா ஆகியவற்றை கடந்த 2-ந் தேதி மோடிச ஆசாமிகள் பொருத்தி உள்ளனர். மாதத்தின் முதல்நாள் என்பதால் அன்று நிறைய பேர் சம்பள பணம் எடுப்பதற்காக தங்கள் ஏ.டி.எம். கார்டுகளை செருகி பணம் எடுத்துள்ளனர். மேலும் அந்த மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரம் மீது யாருக்கும் தெரியாதபடி பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ கேமராவில் பதிவான பின் நம்பரையும் மோசடி ஆசாமிகள் பதிவு செய்துள்ளனர்.

அந்த தகவல்களை கொண்டு போலி ஏ.டி.எம். கார்டுகளை மோசடி ஆசாமிகள் பெங்களூருவில் தயாரித்து கடந்த 6-ந் தேதி அங்குள்ள ஏ.டி.எம்.களில் இருந்தவாறு கோவையில் உள்ளவர்களின் பணத்தை திருடி உள்ளனர். கடந்த 2-ந் தேதி மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை பொருத்துவதற்காக அந்த ஏ.டி.எம்.மில் நுழைந்தபோது அவர்களில் சிலரின் உருவங்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாயின. மேலும் ஒரு ஆசாமி காரில் இருந்து இறங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் வருவதும் பதிவாகி இருக்கிறது. ஆனால் அவர்களில் யார் மோசடி ஆசாமி என்று கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் எழுந்தது.

இதற்கிடையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பல லட்சம் ரூபாயை அபகரித்ததாக சிலர் கைது செய்யப்பட்ட தகவல் கோவை போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் சித்தூர் போலீசாரிடம் கோவை போலீசார் கேட்டனர். அதன்பேரில் சித்தூர் போலீசார் சிலரின் புகைப்படங்களை அனுப்பினார்கள். கூடவே அவர்கள் ஒரு ரகசிய தகவலையும் கூறினார்கள்.

அதாவது அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்றும் ஆனால் கையெழுத்து போட வராமல் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறினார்கள். அந்த தகவலின் பேரில் தலைமறைவான ஆசாமிகள் கோவை வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவை போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டனர்.

சித்தூர் போலீசார் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த ஒரு நபர் கோவை ஏ.டி.எம். கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு நபரின் உருவத்தோடு ஒத்துப்போனது. அவருடைய பெயர் தமிழரசன் என்றும் ஓசூரை சேர்ந்தவர் என்றும் சித்தூர் போலீசார் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள குறிப்பிட்ட முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது அங்கு தமிழரசன் இல்லை. அவரை பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் தமிழரசனும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் வீட்டுக்கு எப்போதாவது தான் வருவார்கள் என்றும் கூ றினார்கள். இதனால் தமிழரசன் மோசடியில் ஈடுபடும் ஆசாமி என்ற முடிவுக்கு கோவை போலீசார் வந்தனர். ஆனால் தமிழரசன் எங்கிருக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியவில்லை.

ஆனால் அவர் தனது தாயாருடன் செல்போனில் அடிக்கடி பேசுவார் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழரசனின் தாயார் செல்போனுக்கு வரும் செல்போன் எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்த போது தமிழரசனின் செல்போன் எண் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் கோவை போலீசார் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜுக்கு இரவு 11 மணியளவில் சென்று விசாரித்த போது தமிழரசன் மற்றும் சிலர் மாலை 6 மணியளவில் அந்த லாட்ஜை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் மோசடி ஆசாமிகள் கிருஷ்ணகிரி அருகே ஒரு லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் தமிழரசன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தமிழரசன் மூலம் தான் மோசடி கும்பலை போலீசார் பிடிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். 

மேலும் செய்திகள்