காயல்பட்டினத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 40 பவுன் நகை- ரூ.2 லட்சம் மாயம்

காயல்பட்டினத்தில் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் மாயமானது. இதுதொடர்பாக வீட்டின் வேலைக்காரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார

Update: 2018-06-24 21:00 GMT

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் மாயமானது. இதுதொடர்பாக வீட்டின் வேலைக்காரபெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

வெளிநாட்டில் மகன்கள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் வாவு அப்துல்சலாம். இவருடைய மனைவி பாத்திமுத்து (வயது 78). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாவு அப்துல்சலாம் இறந்து விட்டார். இதனால் பாத்திமுத்து மற்றும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கப்பார் (80) ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்களின் உதவிக்காக காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த முகம்மது அசன் மனைவி கதிஜா (49) என்பவர் வீட்டின் வேலைகளை கவனித்து வந்தார். இவர் தினமும் இரவு 9 மணிக்கு பாத்திமுத்து வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலை 8 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பி வருவது வழக்கம்.

40 பவுன் நகை மாயம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பாத்திமுத்துவின் வீட்டில் வேலைகளை முடித்து விட்டு கதிஜா தனது வீட்டிற்கு நேற்று காலையில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின்னர் பாத்திமுத்து தனது பீரோவை திறந்தார்.

அப்போது, அங்கு இருந்த நகைகள் சில மாயமாகி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் இஷாக் அகமது உதவியுடன் வெளிநாட்டில் இருக்கும் மகன்களிடம் நகைகளின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, 40 பவுன் நகைகளும், ரூ.2 லட்சமும் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் இஷாக் அகமது புகார் செய்தார். வீட்டு வேலைக்கார பெண்ணான கதிஜா நகை, பணத்தை எடுத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்