விவாகரத்துக்கு மனைவி சம்மதிக்காததால் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
விவாகரத்துக்கு மனைவி சம்மதிக்காததால் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்,
தற்கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 37). இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் 2-வது வீதியில் வசித்து வந்தார். இவர் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லாவண்யா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2 மாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யாவுக்கும் சரவணகுமாருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், நாம் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி தனது மனைவி லாவண்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லாவண்யா அதற்கு சம்மதிக்கவில்லை.
தொடர்ந்து பிரச்சினை ஏற்படவே, லாவண்யா தனது கணவரை விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் தனிமையில் இருந்த சரவணகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.