சிறுபுழல்பேட்டை, பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.

Update: 2018-06-23 22:24 GMT
கும்மிடிப்பூண்டி,

 சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார், கிராம நிர்வாக அதிகாரி சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை தொடர்பாக 23 மனுக்களும், வீட்டுமனை பட்டா கோரி ஒரு மனுவும், ஸ்மார்ட் கார்டு கோரி ஒரு மனுவும் என மொத்தம் 25 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். முன்னதாக ஊராட்சி செயலாளர் மூர்த்தி வரவேற்றார். முடிவில் முன்னாள் வார்டு உறுப்பினர் கணபதி நன்றி கூறினார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஹேமா வெங்கடரமணா தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் ஹேமகுமார், வருவாய் ஆய்வாளர் கண்ணியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க வட்ட தலைவர் சின்னதுரை வரவேற்றார். துயர் துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை கேட்டு மொத்தம் 46 பேர் துயர் துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்கள் அளித்தனர். இதில் 8 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நில அளவர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவி, பூங்குழலி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 89 மனுக்களை பெற்றுக்கொண்டார். சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா, துணை தாசில்தார் சின்னப்பா, கரசங்கால் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை கேட்டு 22 மனுவும், இலவச வீட்டு மனை பட்டா கோரி 51 மனுவும், பட்டா மாறுதல் கோரி 6 மனுவும், ரேஷன்கார்டில் பெயர் மாற்றம் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் பெற்றுக்கொண்டார். இதில் 31 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 58 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக அனைவரையும் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அதிகாரி ராபர்ட்ராஜன், உதவியாளர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்