மண்ணிவாக்கம் கூட்ரோடு சாலையில் லாரி மோதி ஒருவர் பலி

மண்ணிவாக்கம் கூட்ரோடு சாலையில் லாரி மோதி ஒருவர் பலியானார். லாரியில் இருந்து கருங்கற்கள் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-23 22:18 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகர் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 58), இவர் நேற்று மதியம் படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் தாம்பரத்தில் இருந்து மீண்டும் படப்பை நோக்கி வீட்டுக்கு செல்லும் போது மண்ணிவாக்கம் கூட்ரோடு சாலையில் திரும்புவதற்காக காத்திருந்தார்.

அப்போது வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கி கருங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஜானின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் லாரியில் இருந்த கருங்கற்கள் சாலையில் கொட்டியது. இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி மோதி உயிரிழந்த ஜானின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றினார்கள். பின்னர் சாலையில் சிதறி கிடந்த கருங்கற்களை அகற்றிய பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்த விபத்தின் காரணமாக வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

மேலும் செய்திகள்