ஹாவேரி அருகே வீடு புகுந்து பயங்கரம் ஆயுதங்களால் தாக்கி தம்பதி படுகொலை கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

ஹாவேரி அருகே வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி தம்பதி படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-06-23 22:00 GMT

பெங்களூரு, 

ஹாவேரி அருகே வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி தம்பதி படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தம்பதி கொலை

ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா ஹத்திமுத்தூரு கிராமத்தை சேர்ந்தவர் மார்தாண்டப்பா (வயது 36). இவருடைய மனைவி சுதா (24). இந்த தம்பதி நேற்று காலையில் வீட்டில் இருந்தனர். அப்போது, அவர்களின் வீட்டுக்குள் ‘பர்தா‘ அணிந்தபடி நுழைந்த 2 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மார்தாண்டப்பா, சுதா ஆகியோரை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து, அந்த மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த நிலையில், மார்தாண்டப்பா–சுதா தம்பதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

உடனே போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், கொலையான மார்தாண்டப்பா–சுதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்களை யார் கொலை செய்தனர்? எதற்காக கொலை செய்தனர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

இதையடுத்து, அவர்கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மார்தாண்டப்பா–சுதா தம்பதி கொலை செய்யப்பட்டு இருப்பதை அவர்களின் உறவினர்கள் அறிந்தனர். மேலும், அவர்களை அதே கிராமத்தை சேர்ந்த கோட்டேப்பா மல்லப்பா என்பவர் தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவரை பிடிக்க உறவினர்கள் முயன்றனர்.

இந்த வேளையில், கோட்டேப்பா மல்லப்பா காரில் ஏறி தப்பித்து சென்றார். அவர்களை மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் விரட்டினர். ஹத்திமுத்தூரு புறநகரில் சென்றபோது கார் மின்கம்பத்தில் மோதியது. அப்போது, காரில் இருந்து இறங்கிய கோட்டேப்பா மல்லப்பா அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். அவரை பொதுமக்கள் விரட்டிய நிலையில் சம்பவம் குறித்து அறிந்த சவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோட்டேப்பா மல்லப்பாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். கொலை குறித்து கோட்டேப்பா மல்லப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கோட்டேப்பா மல்லப்பா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

மனைவிக்கு பாலியல் தொல்லை

கொலையான மார்தாண்டப்பா எனது மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை பலமுறை கண்டித்தேன். ஆனால், அவர் தனது தவறை திருத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக அடிக்கடி எனக்கும், மார்தாண்டப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர் தகராறு மற்றும் மனைவி மீது மார்தாண்டப்பாவின் பாலியல் வன்கொடுமையால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

இந்த வேளையில், தான் எனது மனைவியைபோல் பிற பெண்களுக்கும் மார்தாண்டப்பா பாலியல் தொல்லை கொடுத்து வருவது தெரியவந்தது. இதனால், எனது தற்கொலை முடிவை மாற்றினேன். அதே வேளையில், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து பல்வேறு பெண்களின் நிம்மதியை கெடுத்து வரும் மார்தாண்டப்பாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்கான திட்டத்தை தீட்டி எனது கூட்டாளியுடன் சேர்ந்து மார்தாண்டப்பா, அவரது மனைவி சுதா ஆகியோரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தேன். மார்தாண்டப்பாவின் மனைவி சுதாவை கொலை செய்யும் நோக்கம் என்னிடம் இல்லை. இருப்பினும், மார்தாண்டப்பாவை கொலை செய்யும்போது சுதா தடுத்தார். இதனால் அவரையும் கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கூட்டாளிக்கு வலைவீச்சு

இந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கோட்டேப்பா மல்லப்பாவின் கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். தம்பதி கொலை சம்பவத்தால் நேற்று ஹத்திமுத்தூரு கிராமத்தில் பெரும் பரபரப்பும், சோகமும் நிலவியது.

மேலும் செய்திகள்