கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அக்காளையும், அத்தானையும் விஷம் கொடுத்து கொன்ற பெண், காதலனுடன் கைது
கள்ளக்காதலை கண்டித்த ஆத்திரத்தில் அக்காளையும், அத்தானையும் விஷம் கொடுத்து கொன்ற பெண், காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர் சித்திரை குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மலிங்கம்(வயது 45), மீனாட்சி (38) தம்பதியர். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.
தர்மலிங்கம், அதே பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். அதில் தூரத்து உறவினரான பாலமுருகன் (28) வேலை பார்த்து வந்தார்.
மீனாட்சிக்கு மைதிலி (36) என்றொரு தங்கை. கணவர், குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், மைதிலிக்கு பாலமுருகன் அறிமுகம் ஆனார். நாளடைவில் மைதிலிக்கும், பாலமுருகனுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது.
கண்டிப்பு
இதை அறிந்த மைதிலியின் அக்காள் மீனாட்சியும், அத்தான் தர்மலிங்கமும் மைதிலியையும், பாலமுருகனையும் கண்டித்தனர். அத்துடன் பாலமுருகனை வேலையை விட்டு நிறுத்தினர்.
ஆனால் சில நாட்களிலேயே பாலமுருகன் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் தர்மலிங்கத்தின் பூக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
அடுத்தடுத்து மரணம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தர்மலிங்கமும், அவரது மனைவி மீனாட்சியும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தனர். மீனாட்சியின் பிரேத பரிசோதனையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், தனது சகோதரர் மற்றும் அவரது மனைவி சாவில் மர்மம் இருப்பதாக மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார்.
துப்பு துலக்கினர்
மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீஸ் படையினர், மரணம் அடைந்த தர்மலிங்கம் மற்றும் மீனாட்சியின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தனர். அதில், அவர்களது வங்கிக்கணக்குகளில் இருந்து மைதிலி கொஞ்சம், கொஞ்சமாக ரூ.17 லட்சம் வரை எடுத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரின் சந்தேகப்பார்வை மைதிலி மீது விழுந்தது. அவரைப்பிடித்து விசாரித்தபோது தர்மலிங்கம், மீனாட்சி மரணத்தில் துப்பு துலங்கியதுடன், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நடந்தது என்ன?
பாலமுருகனுக்கும், தனக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்த நிலையில், தங்களை அக்காள் மீனாட்சியும், அத்தான் தர்மலிங்கமும் கண்டித்ததும், பாலமுருகனை வேலையில் இருந்து நீக்கியதும் மைதிலிக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அவர்களை ஒரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். மைதிலியும், பாலமுருகனும் சேர்ந்து, மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த தர்மலிங்கத்துக்கு மதுவிலும், மீனாட்சிக்கு உணவிலும் மெல்லக்கொல்லும் விஷம் கொடுத்தனர். இதில் அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கும் நிலை உருவானது. அப்போது அவர்களது மருத்துவ சிகிச்சையின் பெயரால், காசோலைகளில் அவர்களது கையெழுத்து பெற்று மைதிலியும், பாலமுருகனும் ரூ.17 லட்சம் எடுத்துள்ளனர். அந்த தொகையில் சிகிச்சைக்கு சில லட்சங்கள் செலவு செய்து விட்டு மீதியை சுருட்டிக்கொண்டார்கள்.
இந்த நிலையில் தர்மலிங்கமும், மீனாட்சியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரச்சினை முடிந்தது என்று நினைத்திருந்த வேளையில் போலீசில் தர்மலிங்கம் சகோதரர் குமார் புகார் செய்ததால் மைதிலியும், பாலமுருகனும் மாட்டிக்கொண்டனர்.
கைது
இதையடுத்து மைதிலியையும், அவரது காதலன் பாலமுருகனையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மைதிலியிடம் இருந்து ரூ.2½ லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
தர்மலிங்கமும், மீனாட்சியும் உயிரிழந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், மயிலாப்பூர் போலீசார் திறம்பட துப்பு துலக்கி உள்ளனர். இதற்காக இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸ் படையினரை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் சரணவன் பாராட்டினார்.