இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Update: 2018-06-23 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள பச்சனம்பட்டியில் முழுநேர ரேஷன்கடை மற்றும் தர்மபுரி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய ரேஷன்கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 14 முழுநேர ரேஷன்கடைகள், 55 பகுதிநேர ரேஷன்கடைகள் என மொத்தம் 69 ரேஷன்கடைகள் புதியதாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகஅரசு செயல்படுத்தும் மக்கள்நல திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திகொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

விழாவில் கூட்டுறவு துணைபதிவாளர்கள் சரவணன், ரவீந்திரன், சார்பதிவாளர் ராஜதுரை, நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிச்சாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்