மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம், 37 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-23 23:15 GMT

புதுச்சேரி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கலில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய 192 பேரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை வடக்கு மாநில தி.மு.க.வினர் செஞ்சி சாலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் அவைத்தலைவர் பலராமன், பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் புஸ்சி வீதி வழியாக சென்று அண்ணாசிலையை அடைந்தது. அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை கைது செய்தனர்.

புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் சாரம் காமராஜர் சாலையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் குமாரவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், அருட்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் போராட்டத்தினை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்