பள்ளிக்குப்பம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ வசதி

பள்ளிகொண்டா அருகே பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

Update: 2018-06-23 22:45 GMT
அணைக்கட்டு,

இந்த பள்ளிக்கு பள்ளிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலைபுரம், முள்ளிப்பாளையம், வரதபாளையம், பள்ளிகுப்பம், செல்லக்குட்டிப்பட்டி, புத்தர்நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வருகின்றனர்.

இதில் பூமலைபுரம், செல்லக்குட்டிப்பட்டி ஆகிய பகுதிகள் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வரும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வயல்வெளி வரப்புகள், ஆபத்தான கிணறுகள் ஆகிய பகுதிகளை கடந்து பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகல்விக்குழு மூலம் அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பயனாக முதற்கட்டமாக பூமலைபுரம் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர் உள்பட 50 மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் காலையில் பள்ளிக்கும் மாலையில் வீட்டிற்கும் ஆட்டோவில் சென்று வருகின்றனர்.

மேலும் அகரம் ஆற்றுக்கு அப்பால் இருக்கும் செல்லக்குட்டிப்பட்டி பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் ஆற்றில் வெள்ளம் வரும்போது 5 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்குவரவேண்டியுள்ளது. அந்த சமயத்தில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் படிப்பு தொடர முடிவதில்லை. எனவே, அந்த பகுதி மாணவர்களுக்கும் ஆட்டோ வசதி செய்து தரவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்